என் அன்பு பாசத் தந்தை....
என்னை அவர் முதற் சிசுவாய் கையிலேந்தி பரவச உச்சி முகர்ந்தவர் ...
எனக்கு இவ்வுலகினை அறிமுகம் செய்த அளப்பரிய அன்பர் ...
"என் அம்மா" என வாஞ்சையுடன் அவர் அன்னையையும் என் வடிவில் கொஞ்சிய பாசக்காரர் ....
தத்தி தவழ நடை பயில அன்னை மொழி பயில முதல் அடி எடுத்து கொடுத்த வழிகாட்டி ....
சுரம் கபம் என சிறு பிராய நோய் காலங்களில் இரவில் கண்முழித்து என் அன்னையுடன் என்னை கவனித்ததில் என் தாயுமானவன் ....
அழகர் திருவிழா காலங்களில் தன் தோள் மீது எனை ஏற்றி "சாமி பாரூ" என நெடுந்துரம் வைகையின் அளப்பரிய அழகை காட்டிய சுமைதாங்கி ....
தான் மேற்படிப்பு பயிலும் காலத்திலும் எனை செந்தமிழ் மாலைகல்லுரிக்கு தவறாமல் அழைத்து சென்று எம் அன்னை தமிழை ருசிக்க செய்த ஆசான்....
பேச்சு போட்டி கட்டுரை திருக்குறள் போட்டிகளில் பங்கு பெற வெற்றி பெற செய்வதில் ஒரு உந்து கோல்....
எமக்கு " நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திண்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு" என எழுதிய என் முப்பாட்டன் பாரதியை அறிமுகப்படுத்திய என் சமுகப்பார்வையை விசாலமாக்கிய வேறு பரிமாணத்துக்கு கொண்டு சென்ற தூண்டில் என் தந்தை.....
பருவ மாற்றம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல, அறிவும் புத்தியும் சார்ந்தது, என வாழ்வியலின் அழகை எடுத்துரைத்ததில் அவர் ஒரு தோழர் ....
பட்டப் படிப்பினை நெடும்துரம் சென்று நான் பயில (என் பாட்டன் ஒப்புதலின்று ) "நீ சென்று இவ்வுலகினை பயின்று வா மகளே" என முகமலர்வோடு எனை அனுப்பியதில் அவர் ஒரு பெண்ணியவாதி....
இல்லற வாழ்க்கை என்பது, வாழ்க்கை பயணத்தின் அடுத்த நிலை. இன்ப
துன்பம் எல்லாம் வரும். அதை எதிர்நோக்க கடந்து செல்ல,
சார்புடையதாக்க
பழகிக் கொள் என அறிவுரை சொன்ன என் தந்தையின் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர்
துளிகள்.....இன்றும் ஏதாவது பதட்டப் பட்டாலும் உடனே என் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை "அப்பா". இதில் என் அன்னைக்கு ஒரு அப்படி ஒரு ஆதங்கம்.... அதில் என் அப்பாவுக்கு அப்படி ஒரு சந்தோசம் பெருமிதம் .....
இன்றும் என் பெயரினை எழுதும் போது "S " என்ற initial தான் உபயோக்கிப்பர் என் தந்தை. அது அவரின் பாசப் பிணைப்பு.
இவள் இன்றும் "என் பெண் தான்" என் மரபணுக்களின் பாதியை கொண்டவள். என் சதை, என் ரத்தம், என்னவள் என்பதில் என் தந்தை ஒரு அன்பு பாற்கடல் ...
தந்தையே உங்களின் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, தீர்க்கம், தமிழ் புலமை, இலக்கிய அறிவு, பிறர்க்குதவும் பண்பு, கடும் உழைப்பு, என பார்த்து வியக்கிறேன்....
யோசிக்கிறேன் என் தகப்பன் சாமிக்கு யான் என்ன செய்து இருக்கிறேன் இதுவரை? விடாத அலைபேசி உரையாடலை தவிர அப்படி ஒன்றும் தெரியவில்லை.... என் செய்ய? யோசிக்கிறேன்.....
தந்தையே உம்மை நேசிக்கிறேன். ..
உ ம்மை உன் பெயரை என் மகன் வடிவில் "கண்ணா" என அழைத்து களிப்புருகிறேன் ....
இறைவா என் தந்தைக்கு நீண்ட ஆயுள் தேக பலம், இறையன்பு, மகிழ்ச்சி நிறைய கொடு என இறைஞ்சுகிறேன்... நன்றி நன்றி!!!!
No comments:
Post a Comment