Thursday, 18 December 2014

மழை


"மழை வாசம் நாசித் துவாரத்தில் உடுறுவி
பின்னம் பிடரியில் ஒரு புரட்டு புரட்டி
நெட்டுருக்கி மனம் பிசைந்து
ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்லும்
ஒரு உருவில்லா மன ஊக்கி"



மழை வாசம் நம் மண்ணின் வாசம்:-

மழை எப்போதும் வந்தாலும் ஏன் உடனே மனதில் ஒரு இனம் புரியா நெகிழ்ச்சி, பரவசம், தனிமை, சில சமயம் அழுகை, உன்னதம், ஏகாந்தம், ஏன் உன்மத்தம் கூட உண்டாக்குகிறது? இது எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா என பல முறை எண்ணிப் பார்த்ததுண்டு. இன்னும் விடை கிடைக்கவில்லை.

சிறு பிராயத்து மழைக்காலங்கள் :-

காகிதக் கப்பல் போட்டி, ஆற்று வெள்ளப்பெருக்கு, கண்மாய் உடைப்பெடுப்பு, என் அம்மாவின் மழைகால காய்ச்சல், சளி கரிசனம், முன்னெச்சரிக்கை,   என் பொண்ணு பெரியம்மாவின் சுட சுட திடீர் பண்டங்கள், திடீர் பள்ளியின் விடுமுறை குதூகலம், என் சகோதரி சகோதரர், அம்மான் மகன் மகள்களுடன் சேர்ந்து " நம்மளை பற்றிய கதைகள்" கலந்துரையாடல்,

வீதிகளில் வழிந்து புரண்டோடும் நீர் சுழிப்பில் யார் காகிதக் கத்திக் கப்பல் முந்துகிறது என்பதின் போட்டா போட்டி.... என் குட்டி தம்பியின் கேரம் போர்டு களேபர விளையாட்டு, அடை மழையிலும் புதிதாய் துவக்கப் பட்டு ஓடிய "வைகை" விரைவு ரயிலை பார்க்கும் பரவசம், மழை சுழல் காற்றால் பாட்டி வீட்டு மொட்டை மாடி அருகில் உயர்ந்து ஓங்கரித்த பேய் போல மிரட்டிய மரம்....

அடை மழையிலும் ஞாயிறு காலை அனைத்து உறவுகளும் பாட்டி வீட்டில் ஒன்று கூடி உணவருந்தி உறவாடி மகிழ்ந்த தருணங்கள், கோடை மழையில் அப்பாவின் கிராமத்து நிறை கண்மாயில் மதிய நீச்சல்கள், கம்மன் சோறும், புளிகுழம்பு வாசனையும் அன்பும் கலந்து ஊட்டிய என் கொள்ளுப் பாட்டியின் கை மணம், ஐயோ மழையில் நனைந்தால் சேராதே என வயல் காட்டிலிருந்து பாதியில் ஓடி வந்து என் தலை துவட்டிய என் பாட்டி சங்கர வடிவம்மையின் பாசப் பரிதவிப்பு......


இளம்பிராயத்து மழை:-

வார விடுமுறை மழையில், என்னுடன் என் நண்பர் குழாம், நண்டு நடுவார், குண்டு குளுவான் என அனைத்து வானரங்களும்  சேர்ந்து எங்கள் தெருவில் அடை மழையில் கோலி குண்டு விளையாடி பின்பு, அவரவர் வீட்டாரால் பின்னி பெடலெடுத்து துவைத்து கொடியில் காயப் போட்ட தருணங்கள்....

மணல் ஆற்றங்கரையில் மழைக்கால வானவில்லை பார்த்து அதனை நோக்கி ஓடி களைப்புற்ற தருணங்கள்...

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா" என வானொலில் மழைக்காலத்தில் மாலை மருதம் கேட்டு சொக்கிய நாட்கள் ....

தீபாவளி பண்டிகை முன்தின மாலையில் அடாது மழை பெய்தாலும் விடாது பட்டாசு வாங்கியே தீருவோம் என அப்பா, தம்பி, அம்மான் மகன் கோபியுடன் மதுரை நகரில் தேவதை (எல்லாம் நினைப்பு தான்) போல வலம் வந்த காலங்கள்...

கல்லுரி விழாக் கொண்டத்தில் கூட" ஓகோ மேகம் வந்ததோ" என குடையுடன் ஆடி அனைவரையும் பதறி (?) ஓட வைத்ததில் கூட மழை theme ஒட்டிக் கொண்டது ....

குற்றால சாரல் மழைக்காலத்தில் எம் கல்லூரி வளாகத்தில் பன்னீர் மரச்சொறிவில் பூக்களில் சொட்டும் தேன் நீரை உறுஞ்சி குடித்த அற்பத தருணங்கள்....

அதே மரம் ஒரு சுழல் மழையில் தடாலென வீழ்ந்த பொழுது அய்யோ எனப் பதறிய நிலையில் மழைத்துளி என் கண்ணீர் துளியுடன் கலந்து உப்பாகி போன நினைவுகள் ....

என் கல்லூரி விடுதியில் பட்டப் படிப்பின் நிறைவு நாளில் பெய்த திடீர் மழையில், நானும் என் அன்புத்தோழி அஜிதாவும் தண்ணீர் தொட்டி அருகில், "மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு" என வானமே எல்லையாய் ஆடி பாடி களித்த குதூகலங்கள்....

அதன் பிறகு வாழ்கையின் தொடர் ஓட்டத்தில் மழையும் சாரலாய் சிறு சிறு துறலாய், திடீர் பிரவாகமாய், ஒரு நெருங்கிய பிணைப்புடன் ஒட்டிக் கொண்டுள்ளது.... ஆனால் அந்த ஒரு ஈர்ப்பு குறைந்து விட்டதோ என அவ்வப்போது ஒரு ஏக்கம் தோன்ற ஆரம்பித்து என்னவோ உண்மை... 

ஆனால்?

சென்ற வருடம் கொடைகானல் சென்ற பொழுது பெய்த திடீர் instant மழையில் என்னை மறந்து தூண் பாறை அருகே ஓரிரு நிமிடம் ஆடி குதுகலித்த பொழுது, நெற்றி பொட்டில் அறையாமல், நடு வகிடில் வழிந்தோடிய மழை துளி சொன்னது, நீ தான் மாறி விட்டாய் ..... நான் மாறவில்லயென்று ....

அன்றே என் மழை சிநேகிதியை மறுபடியும் நேசிக்க தொடங்கி விட்டேன் ....

ஆதலினால் மழையை நேசம் செய்வீர்!!!!

No comments:

Post a Comment