Thursday, 18 December 2014

தாக்கங்கள் ........

                     தாக்கங்கள் ........

நினைத்த கணத்தில் நெஞ்சை துளைக்கும் கூர் வாட்கள்

திரும்பி பார்க்க வைக்கும்  இளம் பிராயத்து  இனிமை கணங்கள்
இன்றும் ஏக்கத்தோடு இமை நனைக்கும் வர்ண ஜாலங்கள்

ஆற்றாமையுடன் கண் நோக்காமல் நிரந்தரமாய் பிரிந்த வலிகள்
அவ்வப்போது ஆழ் மனதில் எட்டி பார்த்த மின் பிம்பங்கள்

அகவைகள் உருண்டோடினாலும் வடுக்களில் ஒளிந்திருக்கும் ரணங்கள்
அடிக்கடி மனம் தவிக்க வைக்கும்  நினைவின் குருதி புனல்கள்

ஏன், எப்படி, எதனால், விடை காண இயலாத வினாக்கள்
கால சக்கரம் களிப்புடன் ஆட்டுவித்த  பொம்மலாட்டங்கள்

எப்படி தேற்றினாலும் மனம் உரசி செல்லும் ஏமாற்றங்கள்
இந்த நிமிடம் மட்டுமே நிரந்தரம் இடித்துரைக்கும் இயல்புநிலைகள் .........

நினைவுகள்.....


நினைவுகள் ஆழ்மனத்தின் ஆல விருட்சங்கள்......

வேர்கள் மட்டுமின்றி விழுதுகளும் அஸ்திவார தூண்கள்.....

வாழ்க்கை பயணப் பாதையில்.....

                 வாழ்க்கை பயணப் பாதையில்.....

சில மனிதர்கள் கரும்பலகையின் வெண் பலப்பங்கல்
சில உறவுகள் குலை தள்ளும் வாழைகள்


சில சந்திப்புகள் ரயில் சிநேகங்கள்
சில முகவரிகள் கசங்கி போன நாட்குறிப்புகள்


சில பந்தங்கள் வலி தரும் நெருஞ்சி முட்கள்
சில காட்சிகள் பசுமரத்து ஆணிகள்


சில அனுபவங்கள் ஏகலைவன் பாடங்கள்
சில காதல்கள் நீறு பூத்த நெருப்புகள்


சில நினைவுகள் கனவில் உயிர் பெரும் சிலைகள்
சில நிஜங்கள் ஆறா ரணம் தரும் மனக்கீறல்கள்


சில வலிகள் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் மழலையின் கைப்பிடிகள்
சில ஆச்சர்யங்கள் மொட்டுக்கள் மலராகும் அபூர்வ தருணங்கள்


சில நேசங்கள் மட்டுமே ஆழ்மன புரிதலின் நேர் அலை வரிசைகள்
சமச்சீராய் மனம் புத்தி  கையாளும் ரசமானிகள்
தகிக்கும் சுட்டெரிக்கும் பாலைவனத்தின் சோலைகள்
மாலைவேளையில் மனம் வருடி செல்லும் மலைய மாருதங்கள்
நினைத்தவுடன் இதழ்கடை தோற்றுவிக்கும் புன்னகை பூக்கள்


அந்நேசத்தை பெற்றவர் அதிர்ஷ்டசாலி...
அதை தொடர்பவர் பாக்கியசாலி .....

வாழ்க்கை.....


வாழ்க்கை ஒரு குழந்தையின் கண்ணாமூச்சி விளையாட்டு!!

கண் மூடி கண்டறிய துடிக்கும் இல் பொருள் காட்சியினை.......

யார் சொன்னார் காதற் பெண்ணிற் கடைக்கண் பட்டு விட்டால்....


கூதிர் காலம் குளும் பனி
நெடிலிரவு குறில் பகல்


இரவு பணி நிறைவு
நிலவின் மனத் தவிப்பு
அளவில்லா ஆசை காதல் ஏக்கம்
மனக் குமுறல் விசும்பல் கேவல்
இன்றும் நெடும் காத்திருப்பா?
இந்த ஆண்களே இப்படித்தானா?


எங்கும் நிசப்தம் ஏகாந்தம்
அண்டத்தின் தவ மோனம்
கீழ் வானில் மெல்லிய வர்ணஜாலம்
நிலவின் கண்ணில் அதீத நிறை ஒளி
வந்தான் வசீகர புன்னகை பகலவன் !!


வா அன்பே! நெடு நேரம் காத்திருப்பா?
இல்லை அன்பரே இமை பொழுது தான்
கண்ணோடு கண்ணோக்கும் சொற்ப நாழிகை
வரவா சென்று வரவா? ........
செல்லத் தான் வேணுமா ?.......


சொல்லொனா பிரிவில் தின உதயம்!!

விடை தேடும் தேடல்கள் .....

                                          தேடல்

யார் நாம்?


வாழ்க்கை ஓட்டத்தின் தேசாந்திரிகளா?
கால சக்கரத்தின் கை பொம்மைகளா?
கனவுலகின் நிஜ பிம்பங்களா?



பயமுருத்தும் பருவமாற்றத்தின் தகவமைப்புகளா?
பல்கிப் பெருகும் கலப்படத்தின் பரிணாமங்களா?



இயற்கை வளம் சுரண்டும் சுயநலப் பச்சோந்திகளா?
காடழித்து கட்டிடம் பெருக்கும் கல்நெஞ்சர்களா?



இல்லை....

சமூக அவலத்தை இணையத்தில் இடித்துரைக்கும்
இன்றைய இளம் சந்ததியின் ஏற்புடை வழிகாட்டிகளா?



இல்லை...

இதுவும் கடந்து போகும் ஏற்றமுள்ள வேளாண் வளரும்
மாற்றமுடன் மறுமலர்ச்சி வர வித்திடும் வித்தகர்களா?



விடை தேடும் தேடல்கள் .....


என் தந்தை.......



என்  அன்பு  பாசத்   தந்தை....


என்னை அவர் முதற் சிசுவாய் கையிலேந்தி  பரவச உச்சி முகர்ந்தவர் ... 


எனக்கு இவ்வுலகினை அறிமுகம் செய்த அளப்பரிய அன்பர் ...


  "என் அம்மா" என வாஞ்சையுடன் அவர் அன்னையையும் என் வடிவில் கொஞ்சிய பாசக்காரர் ....



  தத்தி தவழ நடை பயில அன்னை மொழி பயில முதல் அடி எடுத்து கொடுத்த வழிகாட்டி ....



சுரம் கபம் என சிறு பிராய நோய் காலங்களில் இரவில் கண்முழித்து என் அன்னையுடன் என்னை கவனித்ததில் என் தாயுமானவன் ....



அழகர் திருவிழா காலங்களில் தன் தோள் மீது எனை ஏற்றி "சாமி பாரூ"  என நெடுந்துரம் வைகையின் அளப்பரிய அழகை காட்டிய சுமைதாங்கி ....



 தான் மேற்படிப்பு பயிலும் காலத்திலும் எனை செந்தமிழ் மாலைகல்லுரிக்கு தவறாமல் அழைத்து சென்று எம் அன்னை தமிழை ருசிக்க செய்த ஆசான்....



பேச்சு போட்டி கட்டுரை திருக்குறள் போட்டிகளில் பங்கு பெற வெற்றி பெற செய்வதில் ஒரு உந்து கோல்....



எமக்கு " நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திண்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு" என எழுதிய என் முப்பாட்டன் பாரதியை அறிமுகப்படுத்திய என் சமுகப்பார்வையை விசாலமாக்கிய வேறு பரிமாணத்துக்கு கொண்டு சென்ற தூண்டில் என் தந்தை.....



பருவ மாற்றம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல, அறிவும்  புத்தியும் சார்ந்தது, என வாழ்வியலின் அழகை எடுத்துரைத்ததில் அவர் ஒரு தோழர் ....


  பட்டப் படிப்பினை நெடும்துரம் சென்று நான் பயில (என் பாட்டன் ஒப்புதலின்று )   "நீ சென்று இவ்வுலகினை பயின்று வா மகளே"   என முகமலர்வோடு எனை    அனுப்பியதில் அவர் ஒரு பெண்ணியவாதி....


 

 இல்லற வாழ்க்கை  என்பது, வாழ்க்கை பயணத்தின் அடுத்த நிலை. இன்ப துன்பம் எல்லாம் வரும். அதை எதிர்நோக்க கடந்து செல்ல, 
சார்புடையதாக்க  பழகிக் கொள் என அறிவுரை சொன்ன என் தந்தையின் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளிகள்.....


இன்றும் ஏதாவது பதட்டப் பட்டாலும் உடனே என் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை "அப்பா". இதில் என் அன்னைக்கு ஒரு அப்படி ஒரு ஆதங்கம்.... அதில் என் அப்பாவுக்கு அப்படி ஒரு சந்தோசம் பெருமிதம் .....


 

  இன்றும் என் பெயரினை எழுதும் போது "S " என்ற initial தான் உபயோக்கிப்பர் என் தந்தை. அது அவரின் பாசப் பிணைப்பு.

 

இவள் இன்றும் "என் பெண் தான்" என் மரபணுக்களின் பாதியை கொண்டவள். என் சதை, என் ரத்தம், என்னவள் என்பதில் என் தந்தை ஒரு அன்பு பாற்கடல் ...

 

 தந்தையே உங்களின் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, தீர்க்கம், தமிழ் புலமை, இலக்கிய அறிவு, பிறர்க்குதவும் பண்பு, கடும் உழைப்பு, என பார்த்து வியக்கிறேன்....


யோசிக்கிறேன் என் தகப்பன் சாமிக்கு யான் என்ன செய்து இருக்கிறேன் இதுவரை?  விடாத அலைபேசி உரையாடலை தவிர அப்படி ஒன்றும் தெரியவில்லை.... என் செய்ய? யோசிக்கிறேன்.....


 

தந்தையே உம்மை நேசிக்கிறேன். ..


உ ம்மை உன் பெயரை என் மகன் வடிவில் "கண்ணா" என அழைத்து களிப்புருகிறேன் ....

 

 இறைவா என் தந்தைக்கு நீண்ட ஆயுள் தேக பலம், இறையன்பு, மகிழ்ச்சி நிறைய கொடு என இறைஞ்சுகிறேன்... நன்றி நன்றி!!!!